மட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், இ.போ.ச, ஊழியர்கள், பணிப்பகிஷ்கரிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையினர், இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கமைவாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு அரசபோக்குவரத்து சாலை ஊழியர்களும் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரச உத்தியோகத்தர்கள்

தங்களது பணிக்கு செல்ல முடியாத நிலைகாணப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு செல்ல முடியாமல், பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததை காண முடிந்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

தமது அடிப்படை சம்பளத்தில் இதுவரையில் 2500 ரூபா சேர்க்கப்படாமை உள்ளிட்ட முக்கிய ஆறு கோரிக்கைகளின் முன்வைத்தே, இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பஸ் தரிப்பிட சாலையின் முன் கதவுகளும் பூட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் போக்குவரத்துச் சாலை ஊழியர்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், கவனயீர்ப்பு மற்றும் சத்தியாக்கிரக போராட்டத்தையும் நடாத்தினர்.

போக்குவரத்துச் சாலைக்கு முன்பாக இந்த எதிர்ப்புப் பேராட்டம் நடைபெற்றது. சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

பயணிகள் பஸ் பயணத்திற்காக பஸ் தரிப்பிடங்களில் பல மணி நேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்ததாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளப் போராட்டமானது, ஒராண்டு நிறைவு பெற்றும் புதிய சம்பளம் 2500 ரூபா இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மட்டக்களப்பு வாழைச்சேனை அரச போக்குவரத்து சாலை ஊழியர்களும் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வாழைச்சேனை பொலிசார் மற்றும் கிழக்கு பிராந்திய போக்குவரத்து செயலாற்று முகாமையாளர் எம்.உவைஸ் ஆகியோர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த வாழைச்சேனை சாலை ஊழியர்கிளின் வேலை நிறுத்தத்தினை கைவிடுமாறு தெரிவித்து, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்கான ஒத்துழைப்பினை போக்குவரத்து சாலை வழங்கவில்லை என, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக, களுவாஞ்சிகுடியில் இருந்து மிகவும் கஸ்ட பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

படுவான்கரை பகுதியில் உள்ள மாணவர்கள், இலங்கை போக்குவரத்து சேவையினையே நம்பியிருப்பதனால், இன்றைய போராட்டம் காரணமாக, அவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை ஊழியர்களும் சாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பதவி உயர்வு, தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் என்பவற்றை கடந்த காலங்களாக வலியுறுத்தி வருகின்றோம். எனினும் எதுவித நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

எனவே இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுளள்ளதாக, ஊழியர்கள் குறிப்பிட்டனர். அக்கரைப்பற்று அரச போக்குவரத்து சாலை ஊழியர்களும் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், மாணவர்களும் அரச உத்தியோகத்தர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் நான்கு சங்கங்கள் ஒன்றாக இணைந்து, ஆறு அம்சகோரிக்கையினை முன்வைத்து முன்னெடுத்துள்ள இப்போராட்டமானது, தீர்வு கிடைக்காத நிலையில் தொடரும் எனவும், ஊழியர்களால் இங்கு கருத்து முன்வைக்கப்பட்டது.

ஒரு சில தனியார் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பஸ் தரிப்பிடத்தில் பயணிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டதையும் அவதானிக்க முடிந்ததாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!