நுவரெலியாவில், உயிரைக் காவுகொண்ட பாலத்திந்கு பதிலாக புதிய பாலம்!

நுவரெலியா அக்கரப்பத்தனை அலுப்புவத்தை தோட்டத்தில், இரண்டு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் ஒன்றை, பொது மக்கள் மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் இணைந்து, பாதுகாப்பு வேலியுடன் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

நுவரெலியா அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுப்புவத்தை தோட்டத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், அதாவது ஜூலை மாதம் 18 ஆம் திகதி, வெள்ளப் பெருக்கினால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயதுடைய இரண்டு மாணவிகள், நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமான முறையில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்;ந்து, அந்த பகுதியில் வாழும் பொது மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றின.
இந்த மாணவர்கள் இறந்ததற்கு காரணம், பாலத்தில் இரு பக்கங்களிலும், பாதுகாப்பு கம்பிகள் இல்லாமையே என சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தோட்டத்தில் இருந்து 20 இற்கு மேற்பட்ட மாணவர்கள், இப்பாதையின் ஊடாக டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு கல்வி கற்க சென்று வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டவுடன், மலையக அரசியல்வாதிகள் சம்பவ இடத்திற்கு சென்று, உடனடியாக பாலத்தை அமைத்து தருவதாக வாக்குறுதிகள் வழங்கிய போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், மழை காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் செல்வதற்காக, அக்கரப்பத்தனை 475 ஜே எல்பத்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் நடராஜா நவராஜாவின் ஏற்பாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதை அமைப்பதற்கு, அயோனா தோட்டத்தில், பழைய தொழிற்சாலை ஊடாக, ஆகரல்பத்த தோட்டத்திற்கு செல்லும் வழியில், 100 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பாலம், இரண்டு இலட்சம் ரூபா செலவில், பிரதேசத்தில் உள்ள நலன்விரும்பிகளின் பூரண பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்டது.

இவ்வாறு புனரமைக்கப்பட்ட பாலம், நேற்று முன்தினம், பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில், அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஆனந்த சிறி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.குழந்தைவேல், நுவரெலியா பிரதேச செயலக கிராம அபிவிருத்தி சங்க பொறுப்பதிகாரி என்.முரளி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!