மட்டு. ஜெயந்திபுரம் பௌத்த விகாரை கணபதி ஆலயத்தில் சங்காபிசேகம் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நல்லிணக்கத்திற்கான ஸ்ரீ கண்திருஸ்டி கணபதி ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்டபொல ஸ்ரீ குணானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய, ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் பௌத்த விகாரை வளாகத்தில் கண் திருஸ்டி கணபதி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனத்தினை தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று இன்று பாற்குட அபிசேகமும், 108 சங்காபிஷேக பூஜையும் மிக சிறப்பாக நடைபெற்றது. கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்களுடன், மட்டக்களப்பு எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ கிரியை பூசணம் சிவஸ்ரீ சி.செல்வராசக்குருக்களால் இணைந்து நடாத்தப்பட்ட விநாயகர் பூஜை வழிபாடுகளுடன், சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குட பவனி ஸ்ரீ கண் திருஸ்டி கணபதி ஆலயத்தை வந்தடைந்து கணபதிக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆலயத்தில் யாக பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய கணபதிக்கு அபிசேகம் செய்யப்பட்டது. நிகழ்வில் ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல குனானந்த நாயக்க தேரர், பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஜெயந்திபுரம் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!