முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, பௌத்த விகாரை பிரச்சினை தொடர்பில், அமைச்சர் மனோ கணேஷச்ன ஆராய்ந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதியில், 2010 ஆம் ஆண்டு இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திலேயே வருகை தந்து குடியேறிய கொலம்ப மேதாலங்க தேரர் என்பவரால், அந்த இடத்திலே இராணுவ ஆதரவுடன், விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, அண்மையில் குறித்த விகாரையில் சர்ச்சைக்குரிய பாரிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், ஆலய வளாகத்தில் பூசை வழிபாடுகளுக்கு சென்ற பக்தர்களுக்கும், தேரர் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில், பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டு, இரண்டு பகுதியினரும் குறித்த பிரதேசத்தில் ஆலய வழிபாடுகளை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருந்ததுடன், ஆலய வழிபாடுகளுக்கு, பௌத்த மத குரு இடையூறு வழங்கக் கூடாது எனவும், நிபந்தனை விதித்து, அவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பிரச்சினை தொடர்பில், விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில். அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஆலய நிர்வாகத்தினர், சர்சைக்குரிய விகாரையின் விகாராதிபதி என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேஷன்.
நான் இந்து விவகார அமைச்சர் மட்டுமல்ல இனங்களின் ஒருமைப்பாடு அமைச்சராகவும் இருக்கின்றேன் எனவே இனங்களுக்கு இடையில் மோதல்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கின்றேன் .
அத்துடன், இந்து மதத்திற்கும் பௌத்த மதத்திற்கும் இடையில் பாரிய ஒற்றுமை இருக்கின்றது, எனவே இதில் முரண்பட வேண்டிய தேவைகள் இல்லை, பௌத்த மதம் சிங்கள மக்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, அதில் தமிழ் மக்களும் இருந்திருக்கின்றார்கள்.
அத்துடன், இதற்கு உரிய முறையில், சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும், ஒருவருக்கு ஒரு நீதி மற்றொருவருக்கு ஒரு நீதி என்று இருக்க முடியாது, ஆகவே இதற்கு இங்கே தீர்வு கிடைக்காமையால், கொழும்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி, கொழும்பில் தீர்மானம் எடுப்போம், பௌத்த மதத்தினையும் சிங்கள மக்களையும் அதிகம் நேசிக்கும் அமைச்சர் நான் ஆனால் இந்து விவகார அமைச்சராகவும் செயற்படுகின்றேன் எனவே இது தொடர்பில் பேசி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது, அமைச்சர் மனோ கணேஷனின் கருத்துக்களை ஏற்காத தேரர்கள் குழுவினர், கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.(சி)