மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின், 150 அவது வருட யூபிலியை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில், நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
அதனடிப்படையில், இன்று காலை மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மாணுவல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், பாடசாலையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வகள் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
விருந்தினர்களாக, மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மாணுவல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் ஜே.ஜே.பிரட்லி உட்பட அருட்தந்தையர்கள், திணைக்கள தலைவர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இன்று முதல் அடுத்த வருடம் ஜீன் 10 ஆம் திகதி வரை, யூபிலி ஆண்டாக பிரகடனப்படுத்தி, ஒரு வருடம் பல்வேறுபட்ட கலை கலாசார பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
விசேட இரத்ததான நிகழ்வு, பொது சிரமதான பணிகள், முதியோர் இல்ல தரிசிப்பு மாபெரும் நடைபவனி, ஆசிரியர் உபசரிப்பு நிகழ்வு, மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு என, பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இறுதி நாள் நிகழ்வில் விசேட கலை கலாசார நிகழ்வுகள் உட்பட பரிசளிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (சி)