தீர்வு விடயத்தில் கோட்டா, ஜேவிபியின் கருத்துக்கள் தெளிவானது – சி.வி.கே

தியாகி திலீபனின் நினைவுத் தூபியை புனரமைத்து பேணிப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு யாழ் மாநகரசபைக்கு மட்டுமே உரித்துடயது என்பதை  கடிதம் மூலமாக யாழ் மாநகரமுதல்வருக்கு அறிவித்துள்ளேன்.

வேறு எந்த கட்சியோ, குழுக்களோ, தனி நபரோ திலீபனின் நினைவுத்தூபிக்கு உரிமை கோர முடியாது என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றேன் என வடமாகாண அவைத் தலைவர் சிவிகே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

1988ம் ஆண்டு ஆணையாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் குறித்த தூபியை அமைத்து திறந்து வைத்திருந்தேன். திலீபன் யார் என்று தெரியாத அல்லது திலீபன் இறக்கும் போது பிறந்திருக்காதவர்கள் இன்று தாங்கள்தான் திலீபனுக்கு எல்லாம் போன்று நடந்து கொள்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் தமிழர் தீர்வு விடயத்தில் கோட்டபாயராஜபக்ச மற்றும் ஜேவிபி ஆகியவற்றின் கருத்து தெளிவானதாக இருக்கின்றபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் கருத்து நழுவல் போக்குடயதாக அமைந்திருக்கின்றது.

அனைவரும் இலங்கையர்கள் என்று எண்ண வேண்டும் அனைவரையும் சமமாக மதிக்கின்றோம் என்று பிரதான கட்சிகள் பேசி வருகின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளவற்றை வழங்குவோம் என்றும் சொல்லி வருகின்றன. இவைதான் வேண்டும் என்றால் நாம் இத்தனை வருட காலம் யுத்தம் புரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசும் எமது அபிலாசைகளை அதிகளவில் ஏற்றுக் கொண்டு சம்மதம் வெளியிடும் வேட்பாளருக்கு எமது ஆதரவினை வழங்குவோhம்.

13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த தயார் என பேசுபவர்கள் அதில் என்ன என்ன தரப்படப் போகின்றது. எந்த வகையில் அது அமையப் போகின்றது என்பதை விரிவாக விளக்கமாக மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!