பங்காளிக்கட்சிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும் : சஜித்

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள, பங்காளிக் கட்சிகளின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கும் எனவும், அதற்காக அவர்களிடம் பேச்சு நடத்த வேண்டிய தேவை இல்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று, கண்டிக்கு விஜயம் செய்த வேளை இக்கருத்தை வெளியிட்டார்.

பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான, மல்வத்துப்பீட மகா விகாரைக்கு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இன்று விஜயம் செய்தார்.

மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து, ஆசி பெற்றுக்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார், அதன் பின்னர் துணை மகாநாயக்கரை சந்தித்து, ஆசிர்வாதப் பூஜையிலும் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து மல்வத்துபீட மகா விகாரைக்கு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ செய்த உதவிகளுக்காக, நன்றி செலுத்தும் வகையிலான நிகழ்விலும் கலந்துகொண்ட அமைச்சருக்கு, மல்வத்துபீட மகாநாயக்க தேரர் தலைமையிலான தலைமைப் பிக்குகள், ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதன் போது, பௌத்த தர்மம் மற்றும் சாசனத்தை பாதுகாப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை, தலைமைப் பிக்குகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்த அனைத்து ஆலோசனைகளையும் செவிமடுத்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் ஆட்சியிலும் பௌத்த தர்மத்தையும், சாசனத்தையும் பாதுகாப்பு செய்து, முன்நகர்ந்து செல்வோம் என்றும், மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைப்படியும் எச்சரிக்ககைளை உள்ளீர்ப்பு செய்து நடப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, பேச்சுவார்த்தையின் ஊடாக, ஜனநாயக முறையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் தீர்மானிக்கப்படுவார் என குறிப்பிட்டார்.

‘பொறுப்பு கிடைக்குமா இல்லையா என்பதை எனக்கும், ஊடகவியலாளர்களுக்கும் முடிவு செய்ய இயலாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மக்கள் பொறுப்பை வழங்கிய பின்னரே அது குறித்து தெளிவாக பேச முடியும்.

எனக்கு வழங்கப்படும் சவால்களை நான் புறம்பே தள்ளியதில்லை. நான் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் நிகழ்கால சவாலான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தெரிவு செய்வதாலும். அதனைவிடுத்து பிரேதச சபைத் தேர்தல் அல்ல.

நாட்டு மக்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தெரிவு செய்கின்ற சவால்தான் தற்போது இருக்கின்றது.

இன்று போய் நாளை வா என்கிற தோஷம் இருப்பதாக சிலர் விமர்சனம் முன்வைக்கலாம். பலவந்தம் இடம்பெறாது என்றும் சிலரால் கூறலாம்.
ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை, சகோதரத்துவம், ஐக்கியத்துடன் பிரச்சினையை தீர்ப்பதே சிறந்த கிரமமாகும்.

இதுதான் உலகம் ஏற்றுக்கொள்ளும் முறைமை, நூதன முறைமையாகும். அந்த முறைமை இருக்கும் போது, கட்டளைப் பிரயோகங்கள் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனியான சிந்தனையை வெற்றி பெற வைப்பற்;கு முயற்சிக்கக்கூடாது.

வேட்பாளர் குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை முடியும்வரை அவர்தான் வேட்பாளர், இவர்தான் வேட்பாளர் என்று கூற முடியாது.
பலருக்கும் பலவித கேள்விகள் இருக்கின்றன. ஆனாலும் நாட்டு மக்களின் கேள்விக்குத் தலைசாய்க்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றேன்.
குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலதரப்பட்ட பிரிவினரது ஆதரவைப் பெற்றுவந்தால்தான், ஜனாதிபதி வேட்பாளர் சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என்ற நிபந்தனையை, பிரதமர் முன்வைத்தமை தொடர்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அவ்வாறு எந்த பேச்சுவார்த்தையையும் நடத்த அவசியமில்லை. பேச்சுவார்த்தை செய்யத் தேவையில்லை.
அவர்கள் அனைவரினதும் ஆதரவு எனக்குக் கிடைக்கும்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!