இலங்கை ஜனாதிபதி – டோகோ ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டோகோ ஜனாதிபதி பவுயர் எசோசிம்னா க்னாசிங்பே நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த டோகோ ஜனாதிபதியை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த நட்புறவுடன் வரவேற்றார்.

டோகோ ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயம் இருநாடுகளுக்குமிடையே பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் மேம்படுவதற்கு ஏதுவாக அமையுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

முன்னணி இலங்கை வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றில்கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்ட டோகோ ஜனாதிபதி, இலங்கை முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் டோகோ நாட்டிலுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக தாம் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பாக ஆடை உற்பத்தி துறை சார்ந்த வியாபாரிகளுக்கு கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்கு மிக குறுகிய காலத்திற்குள் இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புத் துறையினரும் இணைந்து மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கை தொடர்பில் டோகோ ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், டோகோ ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் சனிக்கிழமை தமது நாட்டில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச பயங்கரவாதம் பற்றிய சம்மேளனத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் டோகோ ஜனாதிபதி தெரிவித்தார்.

குறுகிய காலப்பகுதியாயினும் டோகோ ஜனாதிபதியின் பயன்மிக்க இலங்கை விஜயம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, ஆபிரிக்க நாடுகளுடன் பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளல் தொடர்பில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இருநாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு டோகோ ஜனாதிபதியின் இந்த விஜயத்துடன் மென்மேலும் பலப்படுத்தப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, டோகோ ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, அர்ஜுன ரணதுங்க, ரஞ்சித் அலுவிகாரே, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!