பொருளாதர கேந்திர நிலையமாக இலங்கை மாறும் : ரணில்

அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தி, இந்து சமுத்திரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில், கொழும்பு துறைமுக நகரத்தையும் புதிய களனி பாலத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

‘பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்தபோது, அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே, நாம் இன்றும் பயன்படுத்தி வருகின்றோம்.

எனினும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப, பொருளாதாரத்திலும், வீதிப்போக்குவரத்துக் கட்டமைப்புக்களிலும், மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதனடிப்படையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக இலங்கையை வலுப்படுத்திக் கொள்வதையும், கொழும்பை அழகானதும் பொருளாதார வர்த்தக மையமாக உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்’
என பிரதமர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கில், இங்குறுகடை சந்தியில் இருந்து காலிமுகத்திடல் வரையான நான்கு பாதைகளை கொண்ட, மேம்பால நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கொழும்பு துறைமுகத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், இந்த மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இங்குறுகடை சந்தியில் இருந்து காலிமுகத்திடல் வரையிலான நான்கு பாதைகளைக் கொண்ட, 5.3 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட மேம்பாலத்தை நிர்மாணிக்கும் திட்டத்திற்கே அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியை வழங்கும், அதேவேளை சீனா சிவில் என்ஜினியரிங் கொன்ஸ்ரக்ஷன் கோப்பரேஷன் உள்ளிட்ட மூன்று சீன நிறுவனங்கள் இணைந்து, கூட்டு முயற்சியாண்மையின் அடிப்படையில் மேம்பால நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

மூன்று வருட காலத்திற்குள் இந்த மேம்பால நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், மேம்பால நெடுஞ்சாலை நிர்மாணத்தை முன்னெடுக்கவுள்ள சீன நிறுவங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும், இன்று நடைபெற்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!