சிரியாவின், கிழக்கு பகுதியில் இனந்தெரியாத விமானங்கள் தாக்குதல்

சிரியாவின் கிழக்கு பகுதியில், இனந்தெரியாத விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில், ஈரான் ஆதரவு ஆயுத குழுவை சேர்ந்த 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை, பிரிட்டனை தளமாக கொண்ட, சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கான அமைப்பு உறுதி செய்துள்ளது.

அபுகமல் நகரத்திற்கு அருகில் காணப்பட்ட, ஈரான் சார்பு ஆயுத குழுக்களின் தளங்கள், வாகனங்கள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் என்பனவற்றை, இனந்தெரியாத விமானங்கள் இலக்கு வைத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் எல்லைக்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாரிய குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக, ஈரான் சார்பு ஆயுத குழுவினர் மத்தியில் பதட்டத்தை அவதானிக்க முடிகின்றது என, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதை, வைத்தியசாலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தமது தலைமையகத்தின் மீது, ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றதாக, ஈரான் ஆதரவு ஈராக்கிய ஆயுத குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொக்ஸ் நியுஸ், 8 ஆயுத களஞ்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதையும், பாரிய வாகன தொடரணியொன்று அங்கிருந்து புறப்படுவதையும் செய்மதி படங்கள் காண்பிப்பதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம், சிரியாவிலுள்ள ஈரானிய தளங்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில், ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்த கூடிய, 5 பலப்படுத்தப்பட்ட கட்டிடங்களும், 10 மேலதிக ஆயுத களஞ்சியங்களும் காணப்பட்டதாக, செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை, எந்த நாடு மேற்கொண்டது என்பது குறித்து, இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!