மட்டக்களப்பு – படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
நீண்ட காலமாகவே இவ்வீதி குன்றும் குழியுமாக, காணப்படுகின்றது, இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு அதிகாரிகரிகளிடம் பலமுறை வேண்டுகோள்விடுத்தும் அவை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் பிரதிநிகள் என கூறிக்கொண்டு வருபவர்கள் மக்களின் இந்த தேவையை கண்டும் காணாது போல் செயற்படுவதனால் நாம் வீதிக்கிறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மண்முனை தென்மேற்கு பிரதே சபையின் தவிசாளர் சி.புஸ்ப்பலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்…
அரசாங்கம் மட்டுமின்றி அதிகாரிகளும் எமது பிரதேசத்தை ஒதுக்குகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. இதனால் எமது பிரதேசத்தை கழிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகத்தான் கருதுகின்றார்கள் போல் எமக்குப் புலப்படுகின்றது. இந்த விடையம் தொடர்பில் இப்பிரதேசத்தின் பொறுப்புள்ள தவிசாளர் என்ற வகையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு பல தடவைகள் சென்று கதைத்திருக்கின்றேன். புனரமைப்புக்கு அனுமதி வந்துள்ளது விரைவில் கேள்வி மனுக்கோரவுள்ளோம் என தெரிவிக்கின்றார்கள் ஆனால் இன்று வரை அவை நிறைவேற்றப்படவில்வை. என அவர் தெரிவித்தார்.(சி)