ரஷியா, உக்ரைனுக்கு இடையில் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டன.


அந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷியக் கைதிகள் விமானம் மூலம் மாஸ்கோ சென்றடைந்தனர்.

அதேபோல், ரஷியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த உக்ரைன் கைதிகள் விமானம் மூலம் தலைநகர் கீவ் சென்றடைந்தனர். இருதரப்பிலும் மொத்தம் 70 கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.

கீவ் விமான நிலையத்தில் இறங்கிய உக்ரைன் கைதிகளை, அந்த நாட்டு ஜனாதிபதி வொலோதிமீர் ùஸலன்ஸ்கி நேரடியாகச் சென்று வரவேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013-ஆம் ஆண்டில், உக்ரைன் ஜனாதிபதியாக இருந்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உக்ரைன் அரசு ஸ்தம்பித்தது.

அந்தச் சூழலில், உக்ரைனின் அங்கமாக இருந்த கிரைமியாவுக்கு படைகளை அனுப்பிய ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அதையடுத்து, விக்டர் யானுகோவிச்சுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த பெட்ரோ போரஷென்கோவின் அரசுக்கு எதிராக, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

ரஷிய இராணுவ உதவியுடன் சண்டையிட்ட அவர்கள், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர்.

இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் வொலோதிமீர் தலைமையில் அமைந்த புதிய அரசு ரஷியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கைதிகளைப் பறிமாறிக் கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது 70 கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!