நித்தகைக் குளத்தை புனரமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை!

முல்லைத்தீவு – குமுழமுனை கிழக்கு கமக்கார அமைப்பின் பிரிவிற்குட்டபட்ட, பாரிய நீர்ப்பாசனக் குளமாக நித்தகைக் குளத்தினை புனரமைத்து தருமாறு குமுழமுனை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக உடைப்பெடுத்த நித்தகைக் குளத்தை புனரமைத்து தருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் பல தடவைகள் தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை புனரமைத்து தரப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நித்தகைக் குளம் நீண்ட காலமாக உடைப்பெடுத்திருந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்தாண்டு பெய்த கன மழை காரணமாக மீண்டும் நித்தகைக் குளம் உடைப்பெடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியதுடன், பயிர்கள் அனைத்தும் முற்றாக அழிவடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குளத்தை விரைவில் புனரமைத்து தருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் கூறப்பட்டபோதிலும் இதுவரை புனரமைத்து தரப்படவில்லை என்றும், எனினும், மீண்டும் குளத்தை புனரமைப்பதற்கென நீர்ப்பாசன பொறியியலாளர்களால் குளம் அளவீடு செய்யப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்பொழுதும் விவசாயிகள், குறித்த குளத்தின் கீழான வயல்வெளியை பண்படுத்திவிட்டு, மானாவரி பெரும்போகச் செய்கையில் ஈடுபடுவதற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

குழுழமுனையினையில் வாழும் மக்களை பொறுத்தவரையில், கால்நடை மற்றும் விவசாயத்தை நம்பியே வாழ்வதால், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக குறித்த குளத்தை புனரமைத்து, எமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.(நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!