யாழில் சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்து, சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கு நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதிய சுகாதார தொண்டர்களுக்கான நியமனத்தை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று வழங்கவிருந்தார்.

இந்நிலையில், நேற்றையதினம் வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்திற்கு முன்பாக, சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்த சுகாதார தொண்டர்கள்.இன்று நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாவகச்சேரி கலாசார நிலையத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில், வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த சுகாதார தொண்டர்கள் பலரும் திரண்டிருந்தனர்.

தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நேரில் சந்தித்து
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதன்போது, நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய தாம், நிரந்தர நியமனம் வழங்குதலில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்குரிய நீதியை பெற்றுத்தாருங்கள் என போராட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் கோரினர்.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சுகாதார தொண்டர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாகவும், போராட்ட இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னர்,வடக்கு மாகாண ஆளுநருடன் தொடர்பை ஏற்படுத்தி தீர்வினை பெற்றுத்தர முயற்சித்திருந்ததாக தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போராட்டக்காரர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவேளை, நிரந்தர நியமனத்தில் தமது பெயர்கள் உள்ளடக்கப்டாமையால் விரக்தியுற்ற சுகாதார தொண்டர் ஒருவர் மண்ணெண்னெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

தீக்குளிக்க முயற்சித்தவரை சமரசம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஆளுநர் மற்றும் ஆளுநரின் செயலாளருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடி அவர்களது முடிவினை அறிவிப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, பொலிஸாரின் பாதுகாப்புடன், நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளும் சுகாதார தொண்டர்கள், கலாச்சார மண்டபத்துக்குள் நுழைந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர்.

அத்தோடு, கலாசார மண்டபத்துக்குள் நுழைந்து, நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ள வந்தவர்களை வெளியேறுமாறும் கோசங்களை இட்டனர்.

இந்நிலையில், குறித்த இடத்தில் காணப்பட்ட சாவகச்சேரி பொலிஸார், கலாசார மண்டபத்திற்கு நுழைந்து அனைவரையும் வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு கலகமடக்கும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இன்று வழங்கப்படவிருந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம்; நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக
அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தவறான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின் குறித்த பட்டியலை 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்கமாறு போராட்டக்காரர்களிடம் வடக்கு மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!