யாழில், வடக்கு சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கான நியமனத்தில் அநீதி இழைக்கப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள், தமக்கு அரச நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன், பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு தொகுதி சுகாதார தொண்டர்களுக்கு, நாளை யாழ்ப்பாணத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், அந்த நியமனத்தில் முறைகேடுகள் இருப்பதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள, வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினம் இன்று இடம்பெற்ற நிலையிலேயே, அதற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, யாழ்ப்பாண நகரிலுள்ள இலங்கை மனித ஆணைக்குழு அலுவலகத்திற்குச் சென்ற சுகாதார தொண்டர்கள், தமக்கான அரச நியமனத்தில் முறைகேடுகள் உள்ளதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி, தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் முறையிட்டுள்ளனர்.

இதன் போது, சுகாதார தொண்டர்களின் கோரிக்கைகள் தொடர்பான முறைப்பாட்டு அறிக்கையைப் பெற்றுக்கொண்ட மனித உரிமை ஆணைக்குழுவினர், முறைப்பாட்டைப் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளை வழங்கப்படவுள்ள சுகாதார தொண்டர்கள் நியமனத்தில், பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும், அரசியல் செல்வாக்கு அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றம் சுமத்திய சுகாதார தொண்டர்கள், இந்த நியமனம் வழங்கப்படுவதை நிறுத்தி, பாகுபாடு காட்டாது அனைவருக்கும் நியமனத்தை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!