14 பேர், மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில்!

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில், அண்மையில் கைது செய்யப்பட்ட 14 பேரையும், மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அம்பாறை கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், பல்வேறு சந்தர்ப்பங்களில், குற்றப்புலனாய்வு பிரிவினர்கள், பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி, பல மாதங்களுக்கு மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும், நீதிவானின் பிரத்தியேக அறையில் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதனடிப்படையில், தொடர்ச்சியாக கடந்த காலங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சில சந்தேக நபர்கள் தொடர்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், கடந்த தவணையில், சில வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், தற்போதுள்ள சந்தேக நபர்கள் 14 பேருக்கும், மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு, அடுத்த வழக்கு தவணை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும், காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில், கல்முனை சாய்ந்தமருதில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும், கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!