19வது திருத்தச் சட்டத்தினால் நாட்டில் மூன்று தலைவர்கள்

19வது திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார் .

நேற்று (30) யாழ்ப்பாணம் முத்தவெலி நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் யாழ் மாவட்ட நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு ஒரு பகுதியை மீதம் வைத்துள்ளதாகவும் பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து சபாநாயகருக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மூன்று தலைவர்களுக்கு ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்கு உள்ளாகுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு வல்லுனர்கள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் அக்குழு வட மாகாண மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கிய அதேவேளை, தெற்கு வாழ் மக்களிடையே வெறுப்புணர்வை பரவச் செய்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!