ஜனாதிபதி யாழிற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘மைத்ரி ஆட்சி – நிலையான நாடு’ மற்றும் ‘பேண்தகு மீன்பிடி கைத்தொழிற்துறையின் ஊடாக, மீன்பிடித்துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாக திகழ்தல்’ எனும் எதிர்கால நோக்கிற்கமைய, வடக்கு மீன்பிடித்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த மீன்பிடித் துறைமுகம், இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக விசாலமான மீன்பிடித்துறைமுகமாக அமையவுள்ளது.

இதற்காக 12 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரியளவான 300 படகுகளுக்கு தேவையான வசதிகளை, ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த துறைமுகத்தின் இறங்குதுறை, 7.1 ஹெக்டயார் பரப்பளவையும், துறைமுகப் படுக்கை 18.6 ஹெக்டயார் பரப்பையும் கொண்டுள்ளதுடன், 880 மீற்றர் நீளத்தையும் 480 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது.

உலகிலுள்ள நவீன ரக மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக பயன்படுத்தல், பிடிக்கப்படும் மீன்களை கரை சேர்த்தல். எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்ளல், படகுகளை பழுது பார்த்தல், ஐஸ் மற்றும் குளிர்சாதன வசதிகள், படகுகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளல், மீன் விற்பனை, வலை தயாரிப்பு, கடைத்தொகுதி, கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வசதிகள், கரையோரப் பாதுகாப்பு சேவைகள், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த மீன்பிடித் துறைமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய நிகழ்வில், அமைச்சர்கள் பீ.ஹெரிசன், அப்துல் ஹலீம், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், காதர் மஸ்தான், அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட பெரும்பாலான மாகாண மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பங்குபற்றினர்.

இதேவேளை, நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பீ.ஹரிஸன், இலங்கையிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமொன்று வடக்கில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

‘இலங்கை வரலாற்றில் யாரும் இதுவரை கண்டிராத மிகப் பெரிய துறைமுகமொன்று வடக்கில் அமைக்கப்படவுள்ளது. இது வடக்கு மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

சுமந்திரன் கூறியதைப்போன்று, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை ஆரம்பிக்கும் போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தோம்.

அதனை தீர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனடிப்படையிலே ஜனாதிபதியினால் இன்று இந்த துறைமுக வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்த திட்டங்களை ஆரம்பிக்க முடிந்திருந்தால், அதிகளவான வேலைத்திட்டங்களை தற்போது நிறைவு செய்திருக்க எம்மால் முடிந்திக்கும்.

மயிலடி துறைமுகத்தை தொடர்ந்து ஆரம்பிக்கப்படுகின்ற, இரண்டாவது வேலைத்திட்டம் இதுவாகும்.
இந்த துறைமுக வேலைத்திட்டங்கள் ஊடாக எதிர்வரும் காலங்களில் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகும்.
இதனூடாக அதிக பலனை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கில் இதுவரையும் தீர்க்கப்படாமல் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இராணுவம் வசமிருந்த மக்களின் நிலங்களை அவர்களுக்கே வழங்கியுள்ளார். மேலும் மிகுதியுள்ள நிலங்களையும் அவர்களுக்கே கையளிப்பதற்கான நடவடிக்கையை தற்போது மேற்கொண்டு வருகின்றார்.

வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினையான குடி நீர் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையையும் அவர் தற்போது மேற்கொண்டு வருகின்றார்’ என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஹப்புத்து வெளி அந்தணத்திடலில், நன்னீர் திட்டத்தை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் போது, மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவான குடி நீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில், 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில், இந்த நன்னீர் திட்டம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்விலும் மக்கள் பிரதிநிகளும், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மக்கள் நீண்ட காலமாக முகங்கொடுத்து வந்த குடி நீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக, ஜனாதிபதியின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து, யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட, ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டடத்தையும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இந்த புதிய கட்டடம், யாழ்ப்பாண பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, நினைவுப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

அத்துடன், கைதடியில் அமைக்கப்பட்டுள்ள, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியையும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.

இதன் போது ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், புதிய கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இதன் போது, வங்கி தொடர்பான பத்திரமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

வடக்கிற்கான சர்வதேச நீர் வள மாநாடு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
திருநெல்வேலியில் தனியார் விடுதியில் இடம்பெற்ற மாநாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், வடக்கு மாகாண அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். இதில், துறைசார்ந்த நிபுணர்களால் விளக்கங்கள் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு மாணவர்கள் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றதை தொடர்ந்து, புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

புதிய கட்டடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது, மாணவர்களின் நடனத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!