மட்டு, கல்லடி பால வழக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கடந்த 27 ஆம் திகதி சீயோன் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான காத்தான்குடியை சேர்ந்த பயங்கரவாதி முகமட் ஆஷாத்தின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய இரவு கல்லடி பாலம் மறிக்கப்பட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கண்ணீர்குண்டு தாக்குதல் மற்றும் குண்டாந்தடி தாக்குதல் நடாத்தி கலைத்திருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகர், சுஜீகலா உட்பட ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியது, போக்குவரத்தினை தடைசெய்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்போது குறித்த உடற்பாகங்கள் பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி புதைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்க அதிபருக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

விசாரணைகளை தொடர்ந்து ஐந்து பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!