இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் குற்றச்சாட்டு

அம்பாறை, அக்கரைப்பற்று பஸ்தரிப்பிடத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் தனியார் சொகு பஸ்ஸினை தடை செய்து, பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து அக்கரைப்பற்றின் இலங்கை போக்கு வரத்து சபை ஊழியர்கள் நேற்று இரவு குறித்த தனியார் பஸ்ஸினை செல்லவிடாது தடுத்து நிறுத்தினர்.


அக்கரைப்பற்று மற்றும் யாழ்ப்பாண பஸ்தரிப்பிடங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் பயணிகள் போக்கு வரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த தனியார் சொகு பஸ்களினால் இலங்கை போக்கு வரத்து சபையின் பயணிகள் போக்கு வரத்து பஸ்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

இச்சட்டவிரோத போக்குவரத்தின் காரணமாக, குறித்தொதுக்கப்பட்ட நேரத்தில் பயணிகள் போக்கு வரத்தில் ஈடுபட்டு வரும் பஸ்களுக்கு நேர அட்டவணையில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேறு பாதைக்கான போக்குவரத்து உத்தரவுப் பத்திரத்தினைப் பயன் படுத்தியே இத்தனியார் பஸ் சட்ட விரோதமான முறையில் போக்கு வரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று பஸ்தரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட அசாதாரண இச் சூழ்நிலையின் காரணமாக ஒரு மணிநேரம் பயணிகள் போக்கு வரத்தில் தடை ஏற்பட்டிருந்ததுடன் அங்கு சிறிது நேரம் அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த அக்கரைப்பற்று பொலிஸார் மேற்படி குற்றம் சாட்டப்பட்ட தனியார் பஸ் சாரதியிடம் குறித்த போக்கு வரத்திற்கான ஆவணங்களை பரிசீலனை செய்ததன் பின்னர் மேலதிக விசாரணைக்காக சாரதியுடன் பஸ்ஸை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கான உரிய தீர்வினைப் பெற்றுத்தராது போனால் இலங்கை போக்கு வரத்துச் சபையின் அக்கரைப்பற்று நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!