அம்பாறையில், குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

அம்பாறை மாவட்டத்தின் விவசாய நீர்ப்பாசன குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் மற்றும் புதிய நெற்களஞ்சியசாலை, விதைகள் தரப்படுத்தல் நிலையங்கள் உருவாக்கம், உரக்களஞ்சியசாலை உருவாக்கம், குளங்கள் புனரமைப்பு, களப்பு நீரினை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.


அமைச்சர் பி.ஹரிசனின் வேண்டு கோளுக்கமைய அம்பாறை மாவட்ட மேலதிக அராசங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட சகல அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் அன்மையில் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ஆலையடிவேம்பிற்கு வருகை தந்து அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தார்.

இக்கூட்டத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை தமக்கு சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை அமைச்சர் அப்போது பணித்திருந்தார்.

இதற்கமைவாக இன்று இடம்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் விவசாய செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட குளங்களை புனரமைத்தல், உரக்களஞ்சியசாலை உருவாக்கம், மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் இணைப்பினை உருவாக்கல், புதிய நெற்களஞ்சியசாலை, விதைகள் தரப்படுத்தல் நிலையங்களை அமைத்தல் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக களப்பு நீரினை வீண்விரயம் செய்யமால் பாதுகாப்பது தொடர்பிலும் ஏத்து நீர்ப்பாசனத்தின் மூலம் விவசாய செய்கையினை மேற்கொள்ளல் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிக்கையாக சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!