காணிகளை விடுவிக்கக்கோரி மன்னாரில் போராட்டம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச படைகள் நிலை கொண்டுள்ள மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம், நல்லிணக்க அடிப்படையில் விடுவித்து தருமாறு கோரி மன்னாரில் இன்று அடையாள அமைதி போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.


மன்னார் மாவட்ட மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின், மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சார்பாக அதன் இணைப்பாளர் அ.பெனடிக்ற் குருஸ் தலைமையில் அடையாள அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லாட்சி அரசிற்கு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி அரச படையினர் வசம் உள்ள காணிகளை, ஜனாதிபதி விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும், வருகின்ற 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர உள்ள ஜனாதிபதி காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவான வாக்குறுதி ஒன்றை வழங்கி செல்ல வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய ஆவண தொகுப்பு ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளித்தனர்.

குறித்த மகஜரை பெற்று கொண்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மக்களின் கோரிக்கை நியாயமானது. எனவே குறித்த மகஜர் மற்றும் மக்களின் காணி தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும், மாவட்ட செயலகம் சார்பாக காணி விடுவிப்பு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களை மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை, சிலாவத்துறை, முள்ளிக்குளம் கொண்டச்சிகுடா, உட்பட மக்களின் காணிகள் தற்போது வரை அரச படையினர் வசம் உள்ளதுடன் இக்காணிகளை விடுவிக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பல வருடங்களாக போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!