மட்டக்களப்பில் பதற்ற நிலை : தற்கொலை குண்டுதாரியின் உடலை புதைத்ததற்கு எதிராக போராட்டம்

சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி காத்தான்குடியை சேர்ந்த ஐஸ்ஐஸ் பயங்கரவாதியான முகமட் ஆசாத் என்பரின் உடல் பாகத்தினை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் நேற்று மாலை புதைக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதியில் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.


நேற்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்ஐஸ் பயங்கரவாதியான முகமட் ஆசாத் என்பவரின் உடற்பாகம் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது தொடர்பில் வெளியான தகவல்களையடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் கள்ளியங்காடு பிரதான வீதி மறிக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துள்ள பகுதியிலேயே அந்த தாக்குதலுடன் தொடர்புடையவரின் சடலத்தினை புதைப்பது என்பது மிகவும் கவலைக்குரியது என தாக்குதலில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

காத்தான்குடியை சேர்ந்த ஒருவரின் உடற்பாகத்தினை காத்தான்குடியில் புதைப்பதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இங்கு அதனை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை கவலைக்குரியது எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்திய ஒருவனின் சடலத்தினை தமிழ் பகுதியிலேயே புதைக்க நடவடிக்கையெடுத்தமை தமது உணர்வுகளை சீண்டும் செயல்பாடு எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தின் போது வீதிகளில் டயர்களை எரித்தும் வீதிகளை மறித்தும் மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

உரிய அதிகாரிகள் வந்து குறித்த உடற்பாகங்களை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!