சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் : மல்கம் ரஞ்ஜித்

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என, கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று, கண்டிக்கு விஜயம் செய்த வேளை இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, இத்தாலி ஆயர் சபையின் தலைவர் கர்தினால், இன்றையதினம் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையுடன், கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்.

தலதா மாளிகையின் செயற்பாடுகள், அங்கு இடம்பெறுகின்ற வழிபாட்டு முறைகள், புதிய வஸ்துக்கள் என்பவற்றை, ஆயர்கள் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்க கருத்து வெளியிட்ட, கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

நான் எப்போதும் எந்தவொரு கட்சிக்கு சார்பாகவும் பேசவில்லை. மக்களே தீர்மானம் எடுப்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்குகளை இந்த கட்சிக்கு செலுத்துங்கள், அந்தக் கட்சிக்கு செலுத்துங்கள் என்று மக்களுக்கு நாங்கள் எப்போதும் கூறவில்லை.

எனினும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில், பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆறுதல்படுத்தவும் அவர்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்தவும் நம் அனைவரினுடைய கடமையாகும்.

விசேடமாக இன்று அசௌகரியத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ள சில குடும்பங்களின் உறுப்பினர்கள், எம்மை சந்திக்கின்ற போது, ஏன் இப்படி செய்தார்கள் என்றே கேட்கின்றனர். இதற்குப் பின்னணியில் பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டதாக அறிகின்றோம்.

அவற்றை சரிவர விசாரணை செய்து முறையான ஆய்வு செய்யும் வரை எமக்கு ஆறுதலடைய முடியாது.
அதனால்தான் சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கும்படி வலியுறுத்தினோம்.

ஒருசிலர் இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என்று கூறினாலும், அதனை செய்வார்களா என்று பார்க்க வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் அதற்கு பதிலளிக்க வேண்டும். அவர்களிடம் இருந்தே சிறந்த பதிலை நாம் எதிர்பார்க்கின்றோம்.

விசாரணை ஆணைக்குழு தேர்தலுக்கு முன்னதாக அமைக்கப்பட வேண்டும். அனைவருடைய எதிர்பார்ப்பும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் காணப்படுகிறது. அது முக்கியமல்ல. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அவர்களுடைய மனதிலுள்ள வேதனையை நீக்குவதற்கு அதிகாரத்தில் இருப்பவர்களும் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்கட்சியினர் என்ன கூறினாலும் அது பிரயோஜனமில்லை. ஆனால் ஆட்சியிலுள்ளவர்கள் இன்னும் மௌனம் காத்து வருகின்றனர்.

அவர்களுக்கு முடியும்தானே இதனை செய்ய. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய போதிலும் சிறந்த பதிலொன்று இன்னமும் கிடைக்கவில்லை.

கோட்டபாய ராஜபக்சவுக்கு இன்னும் அரசியல் அதிகாரம் இல்லை. எனினும் அவருடைய அறிவிப்பு வெறும் உறுதி மட்டுமே.

கோட்டபாயவை விடவும் ஆட்சியில் உள்ள ஜனாதிபதி, பிரதமர் என்ன வகையான பதிலை அளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கின்றோம்.

எமது நாட்டு சுதந்திரத்திற்குப் பின் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்ட என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

தற்போது இடம்பெறுகின்ற விசாரணை ஆணைக்குழு குறிப்பாக உட்பட ஜனாதிபதி நியமித்த ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று கூறப்பட்டாலும், இன்றுவரை இது வெளியிடப்படவில்லை.

சட்டமா அதிபர் தீர்மானம் எடுக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி பதிலளித்திருக்கின்றார்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!