பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சரியான தொலைநோக்கு தேவை!

 

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்து சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

றுகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
சரியான தொலைநோக்கு மற்றும் திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே கல்விமான்கள் நிறைந்த சிறந்ததோர் நாடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு முடியும்.

பல்கலைக்கழக கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் மாணவர்களின் வசதிகளை அதிகரிப்பதற்கும் கடந்த 05 வருட காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

உயர் கல்விக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் மூலதன செலவு கடந்த வருடங்களில் 60 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அத்தொகை 45 பில்லியனாக மட்டுமே இருந்தது.
மேலும் 2013 – 2014ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் 24,198 என்பதுடன், கடந்த 2018 – 2019ஆம் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 31158 வரை அதிகரித்து இருப்பதாகவும் இது 28 வீதம் வளர்ச்சியாகும்.

மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம், விஞ்ஞான துறைகளுக்கு அதிக மாணவர்களை உள்வாங்க வேண்டியது அவசியமாகும் என்பதுடன், அதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களும் புதிய பீடங்களை உருவாக்கி அவற்றிற்கு தேவையான வசதிகளை அதிகரிப்பது மட்டுமன்றி புதிய பட்ட மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாபொல புலமைப்பரிசில் நிதியை 2500 ரூபாவில் இருந்து 5000 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக துறைசார்ந்த அறிஞர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அதுமட்டுமன்றி 2014ஆம் ஆண்டு இறுதியில் 3821 அமெரிக்க டொலர்களாக இருந்த தனிநபர் வருமானத்தை 4060 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருக்கிறது.

பாடசாலை கல்வியிலும் சிறந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆரம்ப கல்விபெறும் பிள்ளைகளின் பங்கேற்பு 100 வீதமாகவும் இரண்டாம் நிலை கல்வி பெறும் மாணவர்களின் பங்கேற்பு 99 வீதம் என்ற உயர்ந்த பெறுமானத்தை கொண்டிருக்கிறது.

13வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது.

றுகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெறும் இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழா, இலங்கை பல்கலைக்கழகங்களின் முக்கிய விளையாட்டு விழாவாக கருதப்படுவதுடன், 16 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் தேசிய இளைஞர் பல்கலைக்கழக ஒலிம்பிக் விழாவாக கருதப்படுகின்றது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த விளையாட்டு விழா ஒழுங்கு செய்யப்பட்டு வருவதுடன், 2019ஆம் ஆண்டு றுகுணு பல்கலைக்கழகத்தினால் அதற்கான உபசரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை முன்னிட்டு அதன் உத்தியோகபூர்வ கொடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

றுகுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர், தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, றுகுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 13வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் தலைவர் பேராசிரியர் திலக் பி. கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!