ஜனாதிபதியானாலும் தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டும் : முன்னாள் இராணுவ தளபதி

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான, பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைத்தால், மீண்டும் முன்னிலையாக தயார் என, ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


இராணுவ தளபதியான கடமை புரிந்த ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில், கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதனையடுத்து பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றா, மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ தளபதி, மகாநாயக்க தேரருடன் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து மல்வத்துபீட விகாரைக்கு வெளியே, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க பதிலளித்தார்.

பாராளுமன்றம் என்பது கௌரவத்திற்குரிய இடமாகும். அதன் உத்தரவுகளை இராணுவ அதிகாரியானாலும், நாட்டின் பிரஜையானாலும் கைக்கொள்ள வேண்டும்.

அதனால் மீண்டும் ஒர் அழைப்பு வந்தால் நான் முன்னிலையாவேன். இராணுவத்தில் இருந்து நான் ஓய்வு பெற்றிருந்தாலும், இராணுவத்தின் சட்டப்பிரிவில் ஆலோசனை பெற்று, விசேடமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைப்படி அதில் கலந்து கொள்வேன்.

எனினும் விசாரணை இடம்பெறுகின்ற போது, நாட்டின் பிரஜை என்ற வகையில் விசாரணையில் கலந்து கொள்வது அவசியம்.

ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தெரிந்து கொண்டேன். இந்த விவகாரத்தில் யாருக்கும் எதனையும் மூடிமறைப்பதற்கான அவசியம் கிடையாது.

யார் மீதும் விரல்நீட்டக்கூடிய சந்தர்ப்பமும் இல்லை. இதுவொரு விசாரணை. ஆகவே விசாரணைக்கு ஒத்துழைப்பதற்கு நம் அனைவரும் இடமளிக்க வேண்டும்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!