பாதுகாப்பு தொடர்பில் திருப்தியில்லை : ஜி.எல்.பீரிஸ்

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னரான, நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியவில்லை என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்குவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் போது, ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

அவ்வாறு சொன்னபடி அந்த சட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் நீக்கியிருந்தால், ஏப்ரல் தாக்குதலின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 72 மணி நேரத்திற்குக்கூட தடுத்து வைத்து விசாரணை செய்திருக்க முடியாது.

ஏப்ரல் தாக்குதலுக்குப் பின்னர், விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்றாலும் அதில் நாங்கள் திருப்தி கொள்ள மாட்டோம்.

அப்போது அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அப்படியான தருணத்தில், பயங்கரவாத தடைச்சட்டமும் இல்லாதிருந்தால், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் விடுவித்திருக்கவே நேரிட்டிருக்கும்.
ஒரு மணி நேரம்கூட சந்தேக நபர்களை தடுப்பில் வைத்திருக்க முடியாது. இதுமட்டுமல்ல வீடுகளுக்குச் சென்று தேடுதல் நடத்தவும் முடியாது.

வெளிநாட்டு சக்திகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கமே வாக்குறுதி அளித்திருக்கும் நிலையில், ஆசியாவில் அல்ல வேறு எந்த நாடுகளும் அவ்வாறு வாக்குறுதியளிக்கவில்லை.அதேபோல நாட்டின் பாதுகாப்பு நிலைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

ஏப்ரல் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், அவ்வாறு இல்லாவிடின் அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கின்றார்.

ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர், அம்பாறையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதற்கு முன்னர் 16 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

ஒவ்வொரு வாரமும் புதுப்புது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சந்தேக நபர்கள் இன்னும் சமூகத்தில் நடமாடுகின்றனர். இது முடிந்த காரியமல்ல.

நாட்டின் பாதுகாப்பு குறித்து நாங்கள் இன்னும் சந்தேகத்துடனேயே திருப்தியற்ற நிலையிலேயே உள்ளோம்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!