நுவரெலியா அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டம்

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டம், இன்று நடத்தப்பட்டது.


மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு இணைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாச தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார உட்பட அரச திணைக்கள உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது, மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு, உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்து, ஆசிரியர் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு, மூன்று ஒன்றுக்கு பதவி நிலைப்படுத்தி, அவர்களுக்கான கொடுப்பனவை மத்திய மாகாணம் வழங்காததினால், பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என, அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஏனைய சில மாகாணங்களில், அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் இவர்களுக்கும் கூடிய விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும், பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், கடந்த ஐந்து ஆறு மாதங்களாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதும், அவை பயன் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதனால், கல்வி அமைச்சு, அவர்களுக்கான நியமனங்களை வழங்கி, மாகாண பாடசாலைகளுக்கு வழங்கி உள்ளதாகவும், இவர்களுக்கு மூன்று இரண்டுக்கு பதவி நிலைப்படுத்தி, அவர்களுக்கான கொடுப்பனவை மத்திய மாகாணம் வழங்க வேண்டும் எனவும், அதேபோல் தற்போது பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கும் ஆசிரியர் உதவியாளர்கள், தங்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வந்தவுடன், அவர்களுக்கான நிலைப்படுத்தலும் பயிற்சி பெற இருப்பவர்களுக்கும், கொடுப்பனவு அதிகரிப்பும் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜூம் கேள்வி எழுப்பினார்.

இதன் போது, இந்த ஆசிரியர் உதவியாளர்கள், தமிழ் மொழி, சிங்கள மொழி அடங்கலாக 4 ஆயிரம் பேர் இருக்கின்றனர் எனவும், இவர்களின் இந்த நியமனம், நிலைப்படுத்தல் உட்பட சம்பள அதிகரிப்பு தொடர்பில், ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு விதமாக, பயிற்றப்பட்டவர்களுக்கு மாத்திரம் தீர்மானங்கள் எடுக்காமல், பயிற்சி பெற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கும், பயிற்சி பெற இருப்பவர்களுக்கும் ஒரே தீர்மானமாக, அனைத்து மாகாண அளுநர்களும் ஒன்றிணைந்து, கல்வி அமைச்சருடன் இணைந்து, அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்து, அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொண்டால், அதற்கான தீர்வு எட்டப்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன், இந்த விடயம் முக்கியமான விடயமாகும் எனவும், இதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதில் நானும் இணைந்து கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போது தனக்கு பயிற்சி பெற்ற 215 ஆசிரியர் உதவியாளர்களின் விபரம் கிடைத்துள்ளதாகவும், அவர்களில் மூன்று இரண்டுக்கு நிலைப்படுத்த தேவையான அனைத்து விபரங்களும், சரி செய்யப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரிரு வாரங்களில், அவர்களுக்கான பதவியை நிலைப்படுத்தி, கொடுப்பனவை மத்திய மாகாணம் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதேபோல் பயிற்சி பெற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கும், பயிற்சி பெற இருப்பவர்களுக்கும், இந்த நடைமுறை முன்னெடுக்கப்படும் எனவும், மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டினார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!