ஆரம்பமானது மட்டு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று இரவு ஆரம்பமானது.


கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கி வருகின்றது.

சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல் ஆறு பகுதியாக பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காமப்பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்கள் தங்கியதாக கர்ணபரம்பரை கதைகளில் தெரிவிக்கப்படுகின்றன.

கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூசை முறைகளும் பண்டைய முறையில் கதிர்காமத்தினை ஒத்ததாகவே காணப்படுகின்றன.

நேற்று இரவு ஆலயத்தின் வருடாந்த உற்சவமும் கதிர்காமத்தில் நடைபெறுவதைப்போன்ற முறையில் பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாக கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகியினால் திருவிழா அறிவிப்பு நிர்வாகத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய உட்பகுதியில் கொடியேற்றப்பட்டு வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது.

இருபது நாட்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. தங்கவேல் கொண்டுள்ள பேழை அலங்கரிக்கப்பட்டு அதற்கு தினமும் பூசைகள் இடம்பெற்றதுடன் ஆலய உள் வீதி வெளி வீதியுலா இடம்பெறவுள்ளதுடன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கும் பேழை கொண்டுசெல்லப்பட்டு பூசைகளும் நடைபெறவுள்ளன.

இருபது நாட்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி மட்டக்களப்பு வாவியில் முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!