ஐ.எஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளதால், அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அப்துல்லா குர்தாஸ், முன்னாள் ஈராக் ஜனாதபதி சதாம் ஹூசைனின் இராணுவத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மறைமுகமாக இருந்து, ஐ.எஸ் அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பக்தாதி, அவ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை அப்துல்லா குர்தாஸிடம் ஒப்படைத்துள்ளார் என, ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் தெரிவித்துள்ளது.

இவர் தனது அதிகாரங்களை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளமை, 2017 இல் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களை அதிகரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சதாம் ஹூசைனின் இராணுவத்தில் பணியாற்றிய அப்துல்லா குர்தாஸ், 2003 இல் பஸ்ராவில் அல் பக்தாதியுடன் அமெரிக்க படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, அவருக்கு நெருக்கமானவராக மாறினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேராசிரியர் என அழைக்கப்படும் அப்துல்லா குர்தாஸ், ஐ.எஸ் அமைப்பின் ஈவிரக்கமற்ற கொள்கை வகுப்பாளர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், அமைப்பின் பலவீனங்களை கண்டறிவதற்காகவும், எதிர்காலத்தில் அவரை தலைவராக நியமிப்பதை நோக்கமாகக் கொண்டும், அல் பக்தாதி, அப்துல்லா குர்தாஸிற்கு இந்த பொறுப்பை வழங்கியிருக்கலாம் என, பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!