தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு : வெளியானது மருத்து அறிக்கை

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவன், உணவுத் துணிக்கைகள் சுவாசக் குழாய் உள்ளே சென்றதனால், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக, மருத்து அறிக்கை வெளியாகியுள்ளது.


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் கல்வி கற்று வந்த மாணவன், கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரது மரணம் மூச்சுத் திணறல் காரணமாக இடம்பெற்றுள்ளதாக, மருத்துவ அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில், மூன்றாம் வருடத்தில் கற்று வந்த 24 வயதுடைய துர்கேஷ்வரன் கணேஷன் என்ற மாணவன், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவர், நுவரெலியா பூண்டுலோயா டன்சின் தோட்டத்தின், அக்கரமலை என்னும் பிரிவினை பிறப்பிடமாகக் கொண்டவர்.

மர்மமான முறையில் உயிரிழந்த இம்மாணவனின் மரணமானது, மூச்சுத் திணறல் காரணமாக இடம்பெற்றுள்ளதாக, வைத்திய அறிக்கைகள் வெளியானதை அடுத்து, மாணவனின் சடலம் நேற்று பிற்பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உணவுத் துணிக்கைகள் சுவாசக் குழாயில் சென்று அடைத்துள்ளதால், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக, அம்பாறை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எம்.சர்பறாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில், பல்கலைக்கழக பொறியல்துறை விடுதியின் தரைத்தளத்தில் இருக்கும் பகுதியில், உயிரிழந்த நிலையில், சக மாணவர்கள் இவரின் சடலத்தை மீட்டனர்.

நிலப்பகுதியில் தலை குப்புற வீழ்ந்து உயிரிழந்த நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக, சக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவன், முதல் நாள் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு கற்றுக் கொண்டிருந்ததாக, இதனை அவதானித்துக் கொண்டிருந்த நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில், நேற்று பிற்பகல் வேளை சடலம் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் பிறந்த துர்கேஷ்வரன், அக்குடும்பத்தின் மூத்தவர் என்றும், இவரது குடும்பத்தில் இவருடன் இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளதாக தெரியவந்துள்ளதுடன், தாயார் தோட்டத் தொழிலாளி என்றும் தந்தை கூலித் தொழிலாளி எனவும் கூறப்படுகின்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!