‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சி திட்டம்

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சி திட்டத் தொடரின் 7 நிகழ்ச்சி, யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், 23 ஆம் திகதி நிகழ்வு ஆரம்பமான நிலையில், இரண்டாவது தினமான நேற்று, பல்வேறு மக்கள் நலன்சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, மாவட்ட ரீதியில் இதுவரை தீர்வு காணப்படாத மக்கள் பிரச்சினைளுக்கு தீர்வு அளிக்கப்படுவதுடன், அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்வதும், இதன் நோக்கமாகும்.

ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும், பிரதான தேசிய நிகழ்ச்சித் திட்டங்களாகிய, தேசிய உணவு உற்பத்தி, போதைப்பொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய்த்தடுப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், கிராம சக்தி, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா ஆகிய நிகழ்ச்சித் திட்டங்களின் நன்மைகளை, வினைத்திறனாகவும் முறையாகவும் மக்களிடம் கொண்டு செல்வதற்கும், அமைச்சுக்கள், மக்கள் சேவை மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளின் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதும், இதனூடாக இடம்பெறுகின்றன.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், மாவட்டத்தின் 435 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த ஒரு இட்சத்து 95 ஆயிரம் குடும்பங்களை உள்ளடக்கியவாறு இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் இடம்பெறுகின்றன.

சிறுநீரக நோய்த்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக, நீர்த்தாங்கிகளை வழங்குதல், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மக்களை தெளிவூட்டும் நிகழ்ச்சிகளும் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்ச்சிகளும், நேற்றையதினம் இடம்பெற்றன.

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், விதைகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் பல இடங்களில் இடம்பெற்றதுடன், கிராமிய விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யும் விதாதா நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்து தீர்வளிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், மக்கள் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கும், ஜனாதிபதியிடம் தெரிவிக்க நிகழ்ச்சியும் பல இடங்களில் இடம்பெற்றன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!