கட்டட நிர்மாணத்துறையின் தேவை முதன்மையானது:ஜனாதிபதி

நாட்டில் பேண்தகு அபிவிருத்தியுடன் இணைந்த கட்டட நிர்மாணத்துறையின் தேவை முதன்மையானதாக காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச கட்டட நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘அபிவிருத்தி மற்றும் கட்டட நிர்மாணத்துறை சுற்றாடல் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கடந்த காலங்களில் எவரும் கவனத்திற்கொள்ளவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் அறிஞர்களும் துறைசார் நிபுணர்களும் கடந்த சில வருடங்களாக விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

சுற்றாடல் பாதுகாப்பிற்கான தனிநபர் பொறுப்பை யாரும் மறந்துவிடக் கூடாது.

பெருந்தெருக்கள் மற்றும் பாரியளவிலான கட்டடங்களை நிர்மாணிக்கும்போது நாட்டின் சனத்தொகை, அபிவிருத்தி, பின்புலம், நிலபரப்பு போன்ற விடயங்கள் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் சூழல், சம்பிரதாயம், கலாசாரம், நாட்டின் தனித்துவம் மற்றும் கட்டட கலை முறைமைகளுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட வேண்டியது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

நிர்மாணப் பணிகளின்போது வினைத்திறனான வலுசக்தி பாவனை, பேண்தகு நிலத்திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம், மூலப்பொருட்கள் மற்றும் வளங்களின் முகாமைத்துவம், கட்டட வளாகத்தினுள் சூழற் பண்புகள், நீர் முகாமைத்துவம், பசுமை புத்தாக்கம் போன்ற சமூக, கலாசார நியமங்களுக்கமைய செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, கட்டட நிர்மாணத்துறையின் சிறப்புக்களையும் பாராட்டினார்.

அத்துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் கூடிய தலையீட்டினை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச கட்டட நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது.

தேசிய நிர்மாணத்துறை சங்கத்தினால் 19வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி நாளை வரை கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும்.

தெற்காசியாவில் அதிக நன்மதிப்பினை பெற்றுள்ள சர்வதேச கட்டட நிர்மாணக் கண்காட்சி கட்டட நிர்மாண பொறியியல், வீட்டு நிர்மாணக்கலை, கட்டடக்கலை மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பல்வேறு துறைகளில் 250க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனை கூடங்களைக் கொண்டுள்ளது.

கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் மஹந்த அமரவீர, இலங்கை தேசிய கட்டட நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி, கைத்தொழில் வணிக சபையின் தலைவர் பொறியியலாளர் மேஜர் ரஞ்சித் குணதிலக்க, ஆசிய மற்றும் மேற்கு பசுபிக் நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் மொஹமட் அலி, அலுமெக்ஸ் பி.எல்.சி முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெதிவல உள்ளிட்ட விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!