எரிவாயு சிலிண்டர் திருடிய பதின்ம வயது சிறுவர்கள் கைது!

கல்முனையில் வீதியோர வர்த்தக நிலையங்களில் முச்சக்கர வண்டியின் உதவியுடன், எரிவாயு சிலிண்டர்களை திருடிவந்த மூவர் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலின்டர்கள் திருடப்பட்டிருப்பதாக உரிமையாளர்களால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சி மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், எரிவாயு சிலின்டர்களை களவாடி எடுத்து சென்ற முச்சக்கரவண்டியின் புகைப்படத்தை பெற்றுக்கொண்டனர்.


முச்சக்கர வண்டி தொடர்பில், விசாரணையில் ஈடுபட்டபோது, குறித்த முச்சக்கரவண்டி சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதை அறிந்த பொலிஸார் அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதில் கைதானவர்கள் தனது தந்தைக்கு தெரியாமல் முச்சக்கரவண்டியை எடுத்து சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
கல்முனை பொலிஸாரால் எரிவாயு சிலின்டர்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறையில் வசிப்பவர்கள் 15, 17 மற்றும் 19 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, அண்மையில் அக்கரைப்பற்று சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற சில திருட்டுச் சம்பவங்களுடன் கைதான நபர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் இதில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!