எமது கொள்கையை ஏற்பவர் எவரும் எம்முடன் இணையலாம் : விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும் பேரவையின் இணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரையை நல்லூரில் ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

எழுக தமிழ் அடுத்தமாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்கு முன்னோடியாக நல்லூர்க்கந்தனை தரிசித்தி ஆசிகளைப் பெற்று மக்களுக்கு இது சம்மந்தமான துண்டுப் பிரசுரங்களை வநியோகிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறோம்.

எழுக தமிழ் 2019, கூடிய மக்களின் பங்கு பற்றுதலோடு நடைபெற வேண்டிய நிகழ்வாக இருக்கின்றது.
அதற்கு காரணம் தற்போதைய காலம் பல விதத்திலும் நாட்டில் ஒரு கொந்தளிப்பு நிலைமையை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த வேளையில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்று கேட்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது.

ஆகையினால் அந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற பலரும் பல பிரயத்தனத்தில் தற்போது ஈடுபட்டிருக்கின்றார்கள்.

ஆகையினால் நாங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுக்கு எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய சந்தரப்பம் சூழ்நிலை பிண்ணணி அதற்கேற்ற போல ஏற்படும்.

ஆகவே 2019 எழுக தமிழ் விமர்சையாக பலரது பங்குபற்றுதலுடன் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அதே வேளையில் எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற முறையில் நாங்கள் ஒன்று சேர்கிறோம்.

எந்தெந்தக் கட்சிகள் வருகின்றார்களோ அவர்கள் யாவரும் எங்களுடன் சேர்ந்து அதிலே ஈடுபட முடியும். ஆனால் சில கட்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சென்ற தடவையும் ஒரு கட்சி வந்த போதும் ஒரு இடத்தில் இருந்த திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆனால் எங்கள் கொள்கைகளை அதாவது தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்த பயணிக்கலாம்.

ஆகவே கட்சிகள் என்ற முறையில் யார் யார் வருகிறார்கள் என்பதையும் பார்க்க கொள்கை என்ற அடிப்படையில் யார் யார் எங்களுடன் பங்குபற்றுகிறார்கள் என்பது தான் முக்கியம்.

தற்போதைய காலத்தில் எங்கள் மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை எவ்வளவு காலத்தில் தீர்க்க முடியுமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது சம்மந்தமாக எல்லாம் நாங்கள் அந்த எழுக தமிழ் நிகழ்வில் எடுத்துக் கூற இருக்கிறோம்.

ஆகவே கட்சி என்ற ரீதியில் இல்லாமல் தமிழ் மக்கள் என்ற ரீதியில் சகலரும் கொள்கை அடிப்படையில் எங்களோடு சேர்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்தப் பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பாக பேரவைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அச் சந்திப்புக்கள் வெற்றியளிக்காத காணரத்தினால் இந்த பரப்புரையில் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் விக்கினேஸ்வரனிடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது.

இவ்வாறான பிரச்சனை தற்போது தமிழ் மக்கள் பேரவைக்கு அதற்கு முன்னர் தமிழ் மக்கள் கூட்டணிக்கு இருந்து வந்தது அதனை நாங்கள் பெரிதாக எடுப்பதில்லை. ஏனென்றால் கொள்கை ரீதியாக அவர்கள் எங்களோடு சேர்ந்தவர்கள். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் விடுபட்டு நிற்கின்றார்கள்.

ஒரு காலத்திலே அவர்களும் வந்து எங்களோடு சேருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆகையினால் அதைப்பற்றி இப்பொழுது பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தான் கருதுகின்றேன்.

இதே வேளை கடந்தமுறை யாழிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்து கொண்டிருந்தது.

ஆனால் அண்மைக்காலத்தில் முன்னணிக்கும் பேரவைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளால் முன்னணியினர் பேரவைக் கூட்டங்களுக்கும் செல்வதில்லை.

அந்;த நிலையில் தான் பேரவைக்கும் முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. அத்தகைய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலையே அவர்கள் இந்தப் பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருகின்ற செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி எழுக தமிழ் பேரணி நடைபெற இருக்கின்றது. முக்கியமாக தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

முன் எப்போதும் விட இப்பொழுது மிக நெருக்கடியான நிலைமைகளைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது.
தமிழ் மக்களின் புராதான இடங்கள் அழிக்கப்படுகின்றன. புத்த கோவில்கள் உருவாக்கப்படுகின்றன. அரசாங்கம் உத்தரவாதமளித்தும் கூட அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.

நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் சம்மந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு பல நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இவ்வாறு ஐ.நா .மனித உரிமைகள் ஆணையகத்தில் ஏற்றுக் கொண்ட தீர்மானங்கள் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான சூழலில் ஐனாதிபதித் தேர்தலும் வரவிருக்கிறது. ஆகவே இதற்கு முன்பாக தமிழ் மக்கள் தங்கள் மனோ நிலையை ஒருமித்துக் காட்டுவதற்கும்; தங்கள் கருத்துக்களை வெளியில் சொல்வதற்கும் அது மாத்திரமல்லாமல் வரக்கூடிய தேர்தலில் தமிழ் மக்களது கோரிக்கைகளை எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு வாக்களிப்பது என்ற சூழலை உருவாக்குதவற்குமாக இந்த 16 ஆம் திகதி இந்தப் பேரணி நடைபெற இருக்கினறது என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!