செப்டெம்பர் 3 இல் முடிவு : சுமதிபால

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை, உடனடியாகப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று தெரிவுகள் காணப்படுகின்றன. முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகும். அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகள் மூலமான இணக்கப்பாட்டின் பின்னர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கலாம்.

மூன்றாவதாக, தேர்தலில் போட்டியிடாமல் எமது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டு, நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

இவற்றில் எதனைத் தெரிவு செய்வதென்று இன்னமும் தீர்மானிக்காத நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி எமது முடிவை அறிவிப்போம்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை ஆராய்ந்து தீர்மானிப்பதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஜனாதிபதியினால் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும், மஹிந்த ராஜபக்ஷவினால் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும், எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், அடுத்த வாரம் நாம் பேச்சுவார்த்தைளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் தொடர்ந்தும், அதேபோன்று இயங்குவதை அனுமதிக்க முடியாது.
அதனை கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்.

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்காக பெருமளவான நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக, அது தொடர்ந்தும் இவ்வாறு இயங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் அப் பல்கலைக்கழகம், கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும்.

அங்கு இராணுவத்தினர் பயிற்சி பெறுவதற்குப் பொருத்தமான வசதிகள் காணப்படுகின்றன. நாட்டைப் பிளவுபடுத்தும் போராட்டங்கள், வடக்கு, கிழக்கிலேயே ஆரம்பமாகின.

எனவே அங்கு தற்போது அடிப்படைவாதத்தை போதிக்கத்தக்க பல்கலைக்கழகம் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவதை ஏற்க முடியாது.

எனவே அது உடனடியாகப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!