ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவரையே, நேற்று கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
குறித்த புலனாய்வு உறுப்பினர், விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
2008 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 3 ஆம் திகதி, கொழும்பு கிருலப்பனை பகுதியில் ஊடகவியலாளர் நாமல் பெரேரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், குறித்த இராணுவ புலனாய்வு உறுப்பினர் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கம் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற வழக்கு விசாரணைகளுக்காக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இது வரையில் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார். (சி)