ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற ஸ்ரீ.சு.கட்சியின் ஆதரவு தேவை : முஸ்தபா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாது எந்த வேட்பாளரினாலும் ஜனாதிபதியாக முடியாது என்ற நிதர்சனத்தினை அனைவரும் புரிந்து கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் மாகாணசபைத் தேர்தலில் 17 இலட்சம் வாக்குகளை பெற்றிருந்தோம் எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு எமது கட்சியின் ஆதரவு அவசியமானது.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியமானது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகவே நாம் தொடர்ந்தும் பேச்சுக்களை நடாத்திவருகின்றோம்.

எமது நோக்கங்களை எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டு செல்லக் கூடிய கூட்டணியினை அமைத்து வெற்றி நடைபோட முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளது என்பதை நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம்.

கொள்கை ஒன்றினை அடிப்படையாக கொண்ட கட்சி எமது கட்சி. எமது கொள்கையினை பின்பற்றிக் கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இதேநேரம் யார் என்ன சொன்னாலும் எங்கள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தனது அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்.

அதுமட்டுமல்ல இன்று சுயாதீன ஆணைக்குழு, சுயாதீனமான நீதித்துறை என்பனவற்றை உருவாக்குவதில் ஜனாதிபதியின் பங்களிப்பு இன்றி அமையாதது. அதனை நாம் அனைவரும் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முக்கியமானதொன்று.

நலமான நோக்கத்தைக் கொண்ட அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு எதிர்காலத்தில் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உண்டு. என தெரிவித்துள்ளார் (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!