யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவு கடந்த மூன்று வார காலமாக இயங்கவில்லை என வைத்திய சமூகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு மயக்க மருந்து செலுத்தும் வைத்திய நிபுணர் இல்லாமையினால் கடந்த முன்று வாரகாலமாக இயங்கவில்லை குறித்த பிரிவு இயங்கவில்லை என வைத்திய சமூகம் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக இருதய சத்திர சிகிச்சை பிரிவு முழுமையாக இழுத்து மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்திய சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்து செலுத்தும் வைத்திய நிபுணர் பற்றாக்குறை காரணமாக, கடந்த ஆண்டு முதல் இயங்கி வந்த இருதய சத்திர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மயக்க மருந்து செலுத்தும் வைத்திய நிபுணர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதனால், இருதய சத்திர சிகிச்சை பிரிவுக்கு மயக்க மருந்து செலுத்தும் வைத்திய நிபுணர் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
இதன் காரணமாக கடந்த முதலாம் திகதி முதல் குறித்த பிரிவு செயலிழந்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த ஆண்டு முதல் இயங்கும் குறித்த பிரிவுக்கான விடுதி வசதியும் பெரும் நெருக்கடி நிலைமையாக காணப்படுவதாகவும், இவற்றின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் யாழ் குடா நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனால் இருதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் சுமார் 1000 பேர் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என வைத்திய சமூகம் தெரிவிக்கின்றது.
இவற்றினை கருத்தில் கொண்டு உடனடியாக இருதய சத்திரசிகிச்சை பிரிவிற்கு ஓர் மயக்க மருந்து செலுத்தும் வைத்திய நிபுணரை நியமித்து, தொடர்ந்தும் இருதய சத்திரசிகிச்சை யாழ் குடாநாட்டில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு முன்வரவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் வினவியபோது, குறித்த பிரிவு கடந்த 3 வாரமாக இயங்கவில்லை என குறிப்பிட்ட அவர், குறித்த பிரிவின் முக்கியத்துவம் கருதி அதற்கான மாற்று ஏற்பாடு துரிதமாக இடம்பெற்றுவருவதாக கூறியுள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் இருதய சத்திர சிகிச்சை பிரிவு மீண்டும் இயங்க வைக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.(நி)