அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகர் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட இலவச வைத்திய முகாமொன்று நேற்று நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வினை, இலங்கையின் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மாற்றுத்திறனாளிகள் சமூக சேவைகளை அணுகுதல் மற்றும் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை அடைதல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நவஜீவன அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏனையவர்களைப் போன்று அனைத்து சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே இலவச வைத்திய முகாம் நடாத்தப்பட்டிருந்தது.
இதன்போது இயன் மருத்துவ சேவை, கேட்டல் குறைபாட்டிற்கான பரிசோதனை, பேச்சு தொடர்பான பரிசோதனை மற்றும் பயிற்சி, உளவளத்துணை ஆலோசனை என்பனவும் வழங்கப்பட்டன.
இவ்வேலைத்திட்டத்தினை நவஜீவன அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் 6 பிரதேச செயலகர் பிரிவுகளில் முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை இலங்கையின் 6 மாவட்டங்களிலுள்ள 40 பிரதேச பிரிவுகளில் இதனை செயற்படுத்தி வருகின்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ரி.ஜெயவாணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நவஜீவன அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன், உளவளத்துணை உதவியாளர் எஸ்.கலாதேவி, அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.குணச்செல்வி, இயன் மருத்துவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.(நி)