பப்புவா சிறையில் இருந்து 250 கைதிகள் தப்பி ஓட்டம்

இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டத்தில், பப்புவா சிறை சூறையாடலில் 250 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக, அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது.

முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம், 1963 ஆம் ஆண்டு விடுதலை பெற்று, தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது.

ஆனால், அண்டை நாடாக இருந்த இந்தோனேஷியா, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை, தன்னோடு இணைத்துக் கொண்டது.

அதேவேளை, பப்புவா பிராந்தியத்திற்கு இந்தோனேஷிய அரசு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது.
எனினும் பப்புவா பிராந்தியம் இணைக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரி பிரிவினைவாத அமைப்புகள் போராட தொடங்கின.

அதனடிப்படையில், பல ஆண்டுகளாக பப்புவா பிராந்தியத்தில், இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனால் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா மாகாணங்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே இருந்து வருகின்றன.
மேலும் அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வதாக இந்தோனேஷியா அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி இந்தோனேஷிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இந்தோனேஷிய தேசியக் கொடியை அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய மாணவர்களை இந்தோனேஷிய பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது பப்புவா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

மேற்கு பப்புவா மாகாணத்தின் தலைநகர் மனோக்குவாரி, சோரோங், ஜெயபுரா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது.
போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டடத்திற்கு தீ வைத்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தின் போது சோரோங் நகரில் உள்ள சிறையை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
சிறைக்காவலர்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் சிறை கட்டடத்திற்கு தீ வைத்தனர்.

இதனால் சிறைக்குள் மிகவும் பதற்றமான சூழல் உருவானது.

பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை சிறையில் இருந்து விரட்டியடிக்க முற்பட்டனர்.

இதற்கிடையில் இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.

தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை கற்களை வீசியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டும் அவர்கள் தப்பி சென்றனர்.

இதில் சிறை அதிகாரிகள் உட்பட பலர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து இந்தோனேஷிய நீதித்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மார்லியன் லாண்டே, ‘சிறையில் இருந்து 258 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களில் 5 பேர் மட்டுமே மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!