கொழும்பு துறைமுகத்தின் முனைய அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பு கோட்டை வாவியில் படகு போக்குவரத்தை ஆரம்பித்து வைத்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதே, பிரதான இலக்காக இருக்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனைய அபிவிருத்தி பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.
தெற்கு முனையின் அபிவிருத்தியோடு இடைநிறுத்த போவதில்லை. விரைவில் வடக்கு முனைய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் பயணிகளின் நலன் கருதி படகுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொம்பனித் தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள வாவியில், பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
படகு சேவையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில், அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த படகு சேவையின் ஊடாக, கொம்பனித் தெரு முதல் கோட்டை வரை 9 முதல் 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படகு சேவையை, அனைத்துவித பாதுகாப்புடன், கடற்படை இணைந்து முன்னெடுத்துள்ளது. (சி)