அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யவில்லை என, பல்வேறு தரப்பினரும் கூறிவந்தாலும், அது முற்றிலும் பொய்யான விடயம் எனவும், அமெரிக்க குடியுரிமையை சட்ட ரீதியாக இரத்துச் செய்துள்ளதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்று, கொழும்பு இராஜகிரியவிலுள்ள, பொதுஜன பெரமுன தலைமையகத்தில், மாகாண சபை உறுப்பினர்களின் சந்திப்பு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
‘நான் இன்னும் அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கவில்லை என்கிற பொய்யான பிரசாரங்களை செய்துவருகிறார்கள்.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி அமெரிக்கக் குடியுரிமை நீக்கப்பட்டமைக்கான சான்றிதழை அமெரிக்க தூதரகம் எனக்கு வழங்கியது.
இந்த சான்றிதழை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் சமர்பித்தேன்.
எனது முன்னைய ஸ்ரீலங்கா கடவுச்சீட்டில் இரட்டை குடியுரிமை என்று குறிப்பிட்டப்பட்டதால், அதனை நீக்குவதற்காக குறித்த திணைக்களத்தில் சமர்பித்தேன்.
ஆகவே நான் ஸ்ரீலங்கா பிரஜை என்பதைப் பெற்றுக் கொண்டேன். எனவே இந்த செயற்பாடுகள் சட்டரீதியாகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாத வகையிலும் தீர்க்கப்பட்டு விட்டது’. என குறிப்பிட்டுள்ளார். (சி)