அம்பாறை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரியினை உடனடியாக இடமாற்றித் தருமாறு, வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் ஆகியோரிடம், இன்று நேரடியாக முறையிட்டனர்.
தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரி இப்பிரதேச மக்களுக்கு முறையான வைத்திய சேவை வழங்குவதில் தடையாகவுள்ளதுடன், இப்பிராந்தியத்தில் வினைத்திறன் மிக்கதொரு தள ஆயுர்வேத வைத்தியசாலையான இதனை மிகவும் பின்னடைவான ஒரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கூட்டுப் பொறுப்பின்றி நடந்து கொள்வதுடன் அதிகார துஷ்பிரயோகத்தினையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரினாலும் குறித்த வைத்தியசாலையுடன் தொடர்புடைய அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண ஆணையாளர் ஆகியோருக்கு 22 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். (சி)