ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதே இலக்கு : ஜே.வி.பி

பிரதான கட்சிகள், கடந்த 70 வருடங்களாக மக்களை ஏமாற்றி வருவதாகவும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘கடந்த 18 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட, ஜே.வி.பியின் மக்கள் கூட்டத்தின் பின்னர் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.

மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட எமது கூட்டம் குறித்து, சிலர் பல்வேறு விமர்சனத்தை வெளியிட்டு வருவதோடு, ஒருசில அரசியல் கத்துக்குட்டிகள், மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, விளையாட்டுப் பொருட்களை கீழே அடித்துக் கொள்கின்றனர். அவற்றை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்.

நாட்டு மக்களை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 71 வருடங்களாக ஏமாற்றியே வருகின்றன. பச்சை, நீலம் என்று மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் நாட்டை மாற்றுத்திசைக்கு இட்டுச் செல்கின்ற திசைகாட்டியை காலிமுகத்திடலில் 18 ஆம் திகதி ஆரம்பித்திருக்கின்றோம்.

எமது வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்கவை தேசிய மக்கள் சக்தியாக முன்நிறுத்தியுள்ளதோடு, அவர் தலைமையில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம்.

இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும். பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் தலைமையிலானவர்களின் கொள்கைகள் முற்றிலும் வித்தியாசமானதல்ல.

கொள்ளை, திருட்டு, வீண்விரயம் என்பன அவர்களுடைய மரபணுக்களாகும். அந்தக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக்கும், அதிகளவான வழக்கு விசாரணைகள் காணப்படுகின்றன.

அப்படிப்பட்ட நபர்கள், எவ்வாறு நாட்டு மக்களை நல்வழியில் கொண்டு செல்ல முடியும்? எனவே எமது போராட்டம் என்பது தேர்தலில் வெற்றி பெறுவதோடு நின்றுவிடாது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, பதவியை இராஜினாமா செய்வதல்ல. தொடர்ந்து முன்சென்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதே எமது பிரதான இலக்காகும்.

எமது இந்த இலக்கை அடைவதற்கு அனைத்துக் கட்சிகளையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைக்கின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!