பொதுக் கூட்டணி இன்றி வெற்றி இல்லை : சம்பிக்க

கடந்த கால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தனியாக எவராலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றே தாம் நம்புவதாக, ஜாதிக ஹெல உறுமய தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஜாதிக ஹெல உறுமய தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸ்ஸாநாயக்க பல கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த நாட்டை மிகவும் கீழே கொண்டு செல்லும் ராஜபக்ச குடும்பத்தின் பிடியிலிருந்து மீட்டுவிட கூடிய சக்தி, அவரிடம் தற்போது வரை இல்லை என்றே நாம் நம்புகின்றோம்.

ஆகவே ஜனநாயகத்தினை விரும்புகின்றவர்கள் பலமான வேலைத்திட்டம் ஒன்றினை, தூர நோக்க சிந்தனையை, பலமான அணியொன்றினை முன்நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

அதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பெரியளவிலான பொது அணியொன்றினை உருவாக்குவதற்கு முயன்று வருகின்றோம்.

ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் நாம் தேர்தலில் களமிறங்கிய போதும், தேர்தல் செயலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அது பதிவு செய்யப்பட்டிக்கவில்லை.

எனவே அதனை பதிவு செய்வதற்கான பேச்சுக்களை நடாத்தி வந்தோம். இதனை கடந்த மே மாதம் முதலாம் திகதி அறிவிப்பதற்கு எண்ணியிருந்தோம்.
ஆயினும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் காரணமாக அதனை செய்ய முடியாது போனது.

இந்த குண்டுத் தாக்குதலினால் நாட்டின் அரசியல் நிலமையே ஆட்டம் கண்டதனால் அதற்கான சூழல் அமையவில்லை. இந்த புதிய பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்குவதனால், ஐ.தே.கட்சி சிதைவடைந்து விடும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கம் குறைவடையும். எனவே இதனை அமைக்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி தவிர்ந்த யாரும் வேட்பாளராகி வெல்ல முடியாது என்று இன்னும் சிலர் கூறுகின்றார்கள். 2015ம் ஆண்டுக்கு பின்னராக, தற்போது 10 இலட்சம் புதிய இளைஞர் யுவதிகளின் வாக்குகள் இருக்கின்றன.

எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லாத 40 இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். வரும் தேர்தலில் 130 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள இந்த வேளையில், யாராலும் கூட்டு இல்லாது பொது அணியொன்றினை உருவாக்காது ஜனநாயகத்தினை வெற்றி கொள்ள முடியும் என நாம் நம்பவில்லை.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!