காஷ்மீர் விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில், பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில், சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த 5 ஆம் திகதி, இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்து, அம் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, இந்தியா அறிவிப்பு வெளிட்ட பின்னர், பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இந்தியாவின் அறிவிப்புக்கு எதிர்வினையாக, அந்நாட்டுடனான வணிக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை பாகிஸ்தான் துண்டித்தது.

மேலும் பாகிஸ்தானுக்கான இந்தியத்தூதரை அது வெளியேற்றியது. பல தசாப்தங்களாக மோதலின் மையமாக இருந்து வரும் காஷ்மீருக்கு, முழுமையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளின் நிர்வாகங்களின் ஆட்சிக்கு கீழ், இரு பகுதிகளாக காஷ்மீர் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ‘காஷ்மீர் சர்ச்சை குறித்து முறையிட சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்’ என, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து வகையான சட்ட நுணுக்கங்களையும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் நடப்பதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, பாகிஸ்தான் தொடுக்கவுள்ள வழக்கு வெளிப்படுத்தும் எனவும், பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!