வெடி பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் ஆராய்வு

வெடி பொருட்களை விநியோகிக்கும் போது இடம்பெறும் முறைகேடுகளை குறைத்து, உரிய முறையில் வெடி பொருட்களை விநியோகிக்கும் முறைமை ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்று இடம்பெற்றது.

அனுமதிப்பத்திரம் பெறாத கற் சுரங்கங்கள் மற்றும் மீன் பிடிப்பதற்கு, வெடி பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் பாரிய சூழல் பாதிப்புகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய முறைகேடுகளை தவிர்க்கும் முகமாக, வெடி பொருட்களை விநியோகிக்கும் முறைகள் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வெடி பொருட்களை விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வெடி பொருட்கள் விநியோகம் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிறுவனங்கள், முறையான ஒருங்கிணைப்பை பேண வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, உத்தேச புதிய முறைமைகளை வடிவமைக்கும் போது, குறித்த நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும், வெடி பொருட்கள் தொடர்பான பிரதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குபற்றினர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!