யசூசி அகாசி : இரா.சம்பந்தன் சந்திப்பு

சர்வதேச சமூகம், இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது எனவும், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி, அவற்றை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


ஜப்பானின் உயர் இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போது, இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும், அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என, இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

மேலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில், சர்வதேச சமூகம் பாரிய பங்காற்றியதனை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டுவது தொடர்பில், இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும், அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார்.

சர்வதேச சமூகம், இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது என்பதனை வலியுறுத்திய இரா.சம்பந்தன், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை, இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி, அவற்றை நிறைவேற்ற செய்வது, சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில், அது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!