இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் உயர் இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி நேற்று சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போதே சம்பந்தன் இதனை கூறியதாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும் அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
மேலும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் பாரியளவில் பங்காற்றியதனை சுட்டிக்காட்டிய அவர் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது என்பதனை வலியுறுத்திய சம்பந்தன், இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களிற்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் என்பதனையும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(சே)